ஆனந்த லீலை படமாகிறது நித்தியானந்தா கதை?
பாத்திரத்தில் பழைய சோறு இருந்தாலும், தொட்டுக்க பக்கத்தில் பாதாம், பிஸ்தா, நெய் இருப்பதாக பில்டப் கொடுப்பது சினிமாக்காரர்களின் வழக்கமான பழக்கம். கூடுதல் விஷயங்களைக் கண்ணால் கண்டால்தான் நிஜம்.
“குடுவையில் என்ன இருக்கிறது’ எனக் கேட்டால், பீடா கடைக்காரனின் விரல்களைப் போல கோபத்தில் சிவக்கும் அவர்களது விழிகள். அப்படி ஒரு சம்பவம் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது. போலிச் சாமியார்களின் முகமூடிகளை பொசுக்கப் போகிறேன் எனக் கூறிவரும் பெண் டைரக்டர் ஜெயதேவி, “ஆனந்த லீலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ரஞ்சிதாவின் பணிவிடைக் காட்சிகளால் ஏகத்துக்கும் பரபரப்பாகிய நித்தியானந்தாதான் படத்தின் மையக் கருவா? எனக் கேட்டால், “குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய கதை இல்லை’ என்கிறார்.
இவர் இயக்கும் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட சில மர்ம நபர்கள், “தொலைத்துவிடுவேன்’ என மிரட்டுவதாகக் கூறிவருகிறார். போலீசில் புகார் கொடுங்கள் என்றால், “போலீசாரின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
ஒத்தைக்கு ஒத்தை வரட்டும்; பார்த்துக்கொள்கிறேன்’ என வீராவேசம் காட்டுகிறார். பெண் டைரக்டரின் இந்தத் துணிவைப் பற்றி புளகாங்கிதமாகப் பேசினால், கோடம்பாக்கத்தினர் நமநமக்கச் சிரிக்கின்றனர். “உலகில் இதுவரை சொல்லப்படாத கதை. உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட காட்சி. ஆக்ஷன் காட்சியில் ஆயிரம் கார்கள் அழிக்கப்பட்டன’ என்பன போல, இதுவும் படத்துக்கு ஒருவகையில், “பப்ளிசிட்டி’ தான் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.
கொலை மிரட்டல் வந்தபோதும் போலீசாரின் நேரத்தை வீணடிக்க விரும்பாத ஜெயதேவியின் “ஆனந்தலீலை’ ரசிகர்களின் நேரத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to this page