பொறுப்பற்ற படப்பிடிப்பால் பீதி அடைந்த மக்கள்

ஜூலை 20, 2010 | தமிழ் சினிமா

ரயில்வே தண்டவாளங்களில் சதி வேலைகள் நடப்பதாலும், விபத்துகள் அதிகரித்து வருவதாலும் மக்கள் பதட்டத்துடன் இருக்கும் நிலையில் ஆறாவது வனம் என்ற சினிமாப் படத்தின் பொறுப்பற்ற படப்பிடிப்பால், பொள்ளாச்சி அருகே மக்கள் பீதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் படமாம் இந்த ஆறாவது வனம். பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு கவுரவ கொலை சம்பவத்தை தழுவி எடுக்கப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு இளம் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சி வருகிறதாம்.

இதை பொள்ளாச்சி-பாலக்காடு ரயில் பாதையில் படமாக்கினர். இதற்காக தண்டவாளத்தில் 2 பேரை படுக்க வைத்து, அவர்கள் மீது சிவப்பு மையையும், மாட்டு இறைச்சியையும் தூவி விட்டனர்.

அதன் பின்னர் கேமரா சகிதம், மலை உச்சியில் இருந்து இந்த காட்சியை படமாக்க படக்குழுவினர் மலைக்கு சென்று விட்டனர்.

ஆனால் அந்த வழியாக வந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவன், இரண்டு பேர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே சுதாரித்து ஊருக்குள் போய் சொல்ல, ஊரே திரண்டு வந்து விட்டது.

நிஜமாகவே யாரோ 2 பேர் இறந்து விட்டார்கள் என்று எண்ணிய கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை அறிந்த போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த படக்குழுவினர் அங்கு வந்து நிலைமையை விளக்கினார்கள்.

அதன் பிறகு நடந்ததுதான் கொடுமை. இப்படியா பொறுப்பில்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது என்று கண்டிப்பதற்குப் பதில், படப்பிடிப்புக் குழுவினர் சொன்னதைக் கேட்டு சிரித்தபடியே அங்கிருந்து போனார்களாம் போலீஸார்.

என்னவோ நடந்திருக்கிறதே என்ற பொறுப்புணர்ச்சி அந்த மாடு மேய்க்கும் சிறுவனுக்கு இருந்த நிலையில் இப்படிப்பட்ட காட்சியைப் படமாக்குகிறோமே, அந்த இடத்தில் ஒருவரை நிறுத்தி வைப்போம் அல்லது போலீஸாருக்குத் தகவல் தெரிவிப்போம் அல்லது குறைந்தபட்சம் அருகில் உள்ள ஊருக்காவது தெரிவிப்போம் என்ற பொறுப்பு சற்றும் இல்லாமல் தேவையில்லாமல் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் பதட்டத்தைக் கொடுத்த இந்த படப்பிடிப்புக் குழுவினரை என்ன சொல்வது….

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat