திருமணமே செய்துகொள்ள மாட்டேன்! சோனா அறிவிப்பு!!
எனக்கு திருமணம் நடக்காது. நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். ஆண்களுடன் வாழ்வது சிரமம் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார். சென்னையில் யுனிக் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் நடிகை சோனா, தற்போது கனிமொழி என்ற படத்தை தயாரித்துள்ளார். இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சோனா கூறியதாவது:-
நான், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் அல்ல. சின்ன வயதில் ஏழ்மையை அனுபவித்து இருக்கிறேன். என் சித்தி, ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் மூன்று வருடங்கள் தங்கியிருந்தேன். அப்போது ஆதரவற்ற பெண்களின் கஷ்டங்களை கேட்டு இருக்கிறேன். இப்போது நான் படம் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கிறேன். அதற்கு தமிழ் ரசிகர்கள்தான் காரணம். நான் சம்பாதிக்கிற பணத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு உதவ விரும்புகிறேன். இதற்காக, ஒரு அறக்கட்டளை தொடங்க இருக்கிறேன். இனிமேல் நான் படுகவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன். கவர்ச்சியை குறைத்து கொள்ளப்போகிறேன். கனமான கதாபாத்திரங்களிலும், நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால், என் கொள்கையை கொஞ்சம் தளர்த்துவேன்.
எனக்கு திருமணம் நடக்காது என்றும், அப்படியே திருமணம் செய்துகொண்டாலும் அந்த பந்தம் நிலைக்காது என்றும் ஒரு ஜோதிடர் கூறியிருக்கிறார். ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆண்கள் துணையில்லாமல் வாழ முடியாது என்பது எனக்கு தெரியும். அதேபோல் ஆண்களுடன் வாழ்வதும் சிரமம். எனக்கு சினேகிதிகளை விட, சினேகிதர்கள்தான் அதிகம். 99 சதவீதம் `பசங்களை’த்தான் எனக்கு பிடிக்கும்
இவ்வாறு சோனா கூறியுள்ளார். அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சோனா, அறக்கட்டளை தொடங்குவதால், அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று நிறையபேர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ, அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன், என்றார்.
சோனா தயாரித்துள்ள கனிமொழி படத்தின் ஆடியோவை வருகிற 22ம்தேதி முதல்வர் கருணாநிதி வெளியிடவிருக்கிறார். நடிகர் விஜய் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் என்றும் கூறிய சோனா, எங்களது அழைப்பை முதல்வர் ஏற்றுக் கொண்டது பெருமை தருகிறது. அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார்.

Link to this page