பொள்ளாச்சி மாப்ளே – திரை விமர்சனம்
பொள்ளாச்சி சந்தையில் தில்லு முல்லு செய்து அன்றாட வாழ்வைநகர்த்து பவர்கள் சத்யராஜ், கவுண்ட மணி. அதே சந்தையில் வியாபாரிகளிடம் பிக்பாக் கெட் அடிக்கிறார் சூசன்.
வாரிசு இல்லாத பெரும் பண்ணையார் விணுசக்கரவர்த்திக்கு சத்யராஜை வளர்ப்பு மகனாக்கி சொத்துக்களை அடிக்க வியூகம் வகுக்கிறார் ஜோதிடர் டி.பி.கஜேந்திரன், சத்யராஜ் வளர்ப்பு மகனானதும் அவருக்கு சூசனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.
பண்ணை வீட்டுக்கு வரும் சூசன் சொத்துக்களை சத்யராஜ், டி.பி.கஜேந்திரன் கோஷ்டியிடம் இருந்து பாதுகாக்கிறார். இதனால் அவரை தீர்த்து கட்ட வெளியூரில் இருந்து ஒரு கொலைகாரனை வர வைக்கின்றனர் சூசன் தப்பினாரா, சொத்துக்கள் யார் வசம் போனது என்பது கிளைமாக்ஸ்…
காமெடியில் முழு கதையையும் கோர்த்து சிரிப்பில் வயிற்றை பதம் பார்க்கிறார் இயக்குனர் ஆர்.லட்சுமணன். சந்தையில் கழிவு தக்காளி, வாழைப் பழங்களை ஏமாற்றி கூடுதல் ஏலத்துக்கு விற்பவர்களாக அறிமுகமாகும் சத்யராஜும், கவுண்டமணியும் நக்கல் நையாண்டியில் தோரணம் கட்டுகின்றனர். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன் சேர்ந்ததும் சிரிப்பலையில் அரங்கே குலுங்குகிறது.
பண்ணையார் கொடுக்கும் கட்டு கட்டான பணத்தை டி.பி.கஜேந்திரன் பிடுங்கி இருவருக்கும் `பேட்டா’ என்று ஓரிரு நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுப்பது… வீட்டு சாவி சூசன் கைக்கு போனதும் அவரை கொல்ல துணிவது என சிரிப்பாகவே சீன்கள் நகர்கின்றன.
கிளைமாக்சில் வழிகளில் நீர்கோர்க்க வைக்கிறார் சத்யராஜ். வழக்கமான பாணியில் கவுண்டமணி கலகலக்க வைக்கிறார். டி.பி.கஜேந்திரன் படம் முழுக்க வில்லத்தனமான காமெடியில் தூள் கிளப்புகிறார். இனி முழு நேர நடிகராகலாம்.
கில்லர் மஞ்சுவாக சூசனை கொல்ல வரும் கொலைகாரன் வேடத்தில் மணிவண்ணன் இன்னொரு காமெடி வெடியை கொளுத்தி போடுகிறார். சூசனை பத்ரகாளி வேடத்தில் பார்த்து மூர்ச்சையாகி விழுவது காமெடி உச்சம். பிக்பாக்கெட் திருடியாக மாமனாருக்கு அடங்கிய மருமகளாக வரும் சூசன் அழுத்தம் பதிக்கிறார்.
போலீஸ் அகதிகாரியாக வரும் அனுமோகன், பாசத்துக்காக ஏங்கும் விணுசக்கரவர்த்தி, சொத்தை அபகரிக்க மிரட்டும் அலெக்ஸ் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன.
சீரியஸ் சீன்களையும் காமெடித்தனமாகவே நகர்த்துவது கதையை வலுவிழக்க செய்கிறது. திருட்டுத்தொழில் செய்த சூசன் மனமாற்றத்திலும் தெளிவு இல்லை.
தேவா இசையில் பாடல்கள், தாளம் போட வைக்கின்றன. காமெடி தர்பார்.

Link to this page