கமலுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் அவருக்கு பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழாக்களை நடத்தி வருகிறது. அவர் ஆரம்பகாலத்தில் மலையாள படங்களில் நடித்துள்ளதால் கேரள அரசும் கமலுக்கு விழா எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் கமலுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறி்த்து கேரள நடிகர் சங்கமான அம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமல்ஹாசன் சாதனையாளர்தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் முன்னுரிமை யாருக்குத் தரப்பட வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. மலையாள திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள் ஐம்பது வருடங்களை தாண்டி கலையுலக சேவையாற்றி வருகிறார்கள். முதலில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துங்கள். பிறகு தமிழகத்திலிருந்து நடிகர்களைக் கூட்டி வந்து பாராட்டலாம்” என்று கூறியுள்ளது.
வருகிற 22ம்தேதி கமலுக்கு பாராட்டு விழா நடத்த கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. விழாவில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பங்கேற்கலாம் என்று அம்மா அமைப்பு கூறியுள்ளது.

Link to this page