அஜீத் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவேன் – கெளதம் மேனன் சபதம்
அஜீத் நடிப்பதாக இருந்து, பின்னர் பெரும் சர்ச்சைக்குளாகிப் போன கதையை தூசு தட்டி பல்வேறுநகாசு வேலைகளைப் பார்த்து அதை பெரிய ஹிட் படமாக்கப் போவதாக கூறியுள்ளாராம் கெளதம் மேனன்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு அஜீத்துடன் இணைவதாக இருந்தார் கெளதம். இப்படம் ஒரு துப்பறியும் கதை. படத்திற்கு துப்பறியும் ஆனந்த் எனவும் பெயர் சூட்டியிருந்தார். சமந்தா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் நீண்ட நாட்களாக அஜீத் ஸ்கிரிப்ட் குறித்து கேட்டும் அதை தயார் செய்யாமல் இழுத்தடித்து வந்தார் கெளதம் என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அஜீத், கெளதம் வேண்டாம் எனக் கூறி விட்டார்.
இதையடுத்து தயாநிதியும், கெளதமை டிராப் செய்து விட்டு, வெங்கட் பிரபுவை புதிய இயக்குநராக்கி விட்டார். இப்போது மங்காத்தா என்ற பெயரில் இந்தப் படம் தொடங்கியுள்ளது.
அஜீத்தின் அதிரடியால் அப்செட்டாகிப் போன கெளதம் மேனன், அஜீத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அஜீத், கெளதம்மேனன் இல்லாமல் தானே 50 படங்களை முடித்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜீத் நடிப்பதாக இருந்த கதையை தூசி தட்டில் கையில் எடுத்துள்ளாராம் கெளதம். அதில் சில மாற்றங்களைச் செய்து, திரைக்கதையை விறுவிறுப்பாக்கி, இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்க சபதம் போட்டுள்ளாராம் கெளதம்.
இந்தி விண்ணைத் தாண்டி வருவாயாவை தற்போது ஆரம்பித்துள்ள கெளதம் மேனன் அதை முடித்த பின்னர் துப்பறியும் கதைக்குப் போகவுள்ளாராம்.

Link to this page