ஷூட்டிங்கின்போது காதலருடன் நடிகை ஓட்டம் – போலீஸில் தயாரிப்பாளர் புகார்
கண்டேன் என்ற படத்தின் படப்பிடிப்பிலிருந்து யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஓடிவிட்டார் நிம்மி என்ற புதிய நடிகை.
அந்த நடிகை மீது பட அதிபர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.
இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், ‘கண்டேன்.’ இந்தப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நிம்மி என்பவர் நடித்து வந்தார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த 2 நாட்களும் நிம்மி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
மூன்றாவது நாள் படப்பிடிப்பின்போது, நிம்மியை காணவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நிம்மி இல்லாததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
விசாரித்ததில், நிம்மி தன் காதலருடன் ஓடிப்போனது தெரியவந்தது. படப்பிடிப்பு குழுவினர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவர் ஓட்டம் பிடித்ததால் படத்தின் இயக்குநர் முகிலும் தயாரிப்பாளரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீசில் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார். நிம்மிக்கு ஒரு நாளைக்கு ரூ 10 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், 2 நாட்கள் நடித்ததற்கு ரூ 20 ஆயிரம் பெற்றுக் கொண்ட அவர் ஓடிப்போனதால், படத்தின் தொடர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
நிம்மியைத் தேட போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Link to this page