கல்யாணத்திற்கு வர வேண்டாம் என்று கூறியதால் ரசிகர்கள் அதிருப்தி – விருந்து வைக்க ரஜினி திட்டம்

செப்டம்பர் 7, 2010 | தமிழ் சினிமா

கல்யாணத்திற்கு வந்தால் கூட்டம் கூடும், போக்குவரத்து பாதிக்கப்படும், மக்களுக்குச் சிரமம் என்று கூறி ரசிகர்களை திருமணத்திற்கு வர வேண்டாம் என ரஜினி காந்த் கூறியதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் மகளையும், மருமகனையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஒரு கூட்டத்தைக்கூட்ட திட்டமிட்டிருக்கிறார் ரஜினிகாந்த் .

சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் ரஜினி ஒரு அறிக்கை விட்டார். அதில் ரசிகர்கள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும், கூட்டம் கூடி விடும். எனவே அவர்களை அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இது ரஜினி ரசிகர்களை பெரும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. முதல் மகளுக்கு நடந்த கல்யாணத்தின்போதும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், இப்போது கடைசி மகளுக்கு நடந்த கல்யாணத்திற்கு வர வேண்டாம் என தலைவரே சொல்லி விட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தனர்.

புதுப் படம் வெளியாகும்போதும் நாம் கூடுகிறோம்,அப்போதும் கூட்டம் கூடுகிறது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் தலைவர் இப்படிச் சொல்லவில்லையே என்று ரசிகர்களில் சிலர் வேதனைப்பட்டனர்.

ரசிகர்களின் இந்த புலம்பல் ரஜினி காதுகளுக்கு போயுள்ளது. இதையடுத்து ரசிகர்களை சமாதானப்படுத்த அவர் இறங்கி வந்துள்ளார். அதாவது தனது மகளையும், மருமகனையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, சிறப்பான விருந்து ஒன்றையும் அளித்து குஷிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருமணத்திற்கு வருகை தந்த முதல்வர் கருணாநிதி , மத்திய மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். பரிசுப் பொருட்களை அனுப்பியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,

எனது மகளின் திருமண வைபவத்தை முன்னிட்டு, என்னுடைய ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்து, மணமக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விருந்து வைக்க நான் ஆசைப்படுகிறேன். அது முடியுமானால், அதை நிறைவேற்ற நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.

முடியுமானால் அழைத்து விருந்து வைக்கிறேன் என்று ரஜினி கூறியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தும் எனத் தெரிகிறது.

Copy the code below to your web site.
x 

கருத்தை பதிவு செய்யுங்கள்

TamilWire.com Latest English News

Latest Songs Downloads

Latest Tamil Movie Trailers to Watch Online

123Tamilgallery.com Latest Tamil Galleries