ஒரு நடிகையின் வாக்குமூலம் – திரை விமர்சனம்

பெப்ரவரி 13, 2012 | திரை விமர்சனம்

நடிகைகளின் திரை மறைவு வாழ்க்கை கதை…

ஆந்திராவில் வசிக்கும் நாடக நடிகர் யோகி தேவராஜ்- ஊர்மிளா தம்பதி மகள் சோனியா அகர்வால். மகளை உள்ளூர் விழாவில் நடிகையாக மேடையேற்ற பெற்றோர் பிரியப்படுகின்றனர். ஆனால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமாகும் ஊர்மிளா சினிமாவில் சோனியாவை பெரிய நடிகையாக்குவேன் என ஊர்க்காரர்களிடம் சபதம் போட்டு சென்னை வருகிறார்.

இருவரும் பட கம்பெனி, ஸ்டூடியோக்களில் அலைந்து வாய்ப்பு தேடுகின்றனர். இயக்குனர், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். வேறு வழியின்றி ஊர்மிளா தன்னை இழக்கிறார். பிறகு மகளையும் இயக்குனரின் காம இச்சைக்கு பலியாக்கி நடிகை வாய்ப்பை பிடிக்கிறார். சோனியாவுக்கு மளமளவென படங்கள் குவிந்து முன்னணி நடிகையாகிறார்.

கோடி கோடியாய் பணம் வந்ததும் தாய்க்கு மனமாற்றம் ஏற்படுகிறது. மகளை சுய நலத்துக்காக பெரிய புள்ளிகளுக்கு விருந்தாக்குகிறார். கதாநாயகன், இயக்குனர் போன்றோரும் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து படுக்கையில் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுகின்றனர். இதனால் வாழ்வில் விரக்தியாகும் சோனியா என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

அஞ்சலி கேரக்டரில் கச்சிதமாய் பொருந்துகிறார் சோனியா அகர்வால். நடிகையாகும் கனவுகளை தேக்கி வைத்து வாய்ப்புக்கு அலைந்து ஏமாற்றமாகி தவிப்பதிலும், நடிகையாக வளர்ந்தபின் சொந்த பந்தங்களின் பண ஆசையில் சிக்கி விம்முவதிலும் மனதில் இறங்குகிறார். பணம் பண்ணும் எந்திரம் இல்லம்மா எனக்கும் மனசு இருக்கு விட்டுரு என்று தாயிடம் கெஞ்சும்பொதெல்லாம் பரிதாபம் அள்ளுகிறார்.

காதலன் இயக்குனர் ஆக தயாரிப்பாளரிடம் தன்னை இழக்க முன் வரும்போது அனுதாபபட வைக்கிறார். டைரக்டர் ஆக சோனியா அகர்வாலை பயன்படுத்தி பிறகு அவருக்கே துரோகம் செய்யும் சதன் அமைதியான வில்லத்தனத்தில் வீரியம் காட்டுகிறார். சோனியாவின் தாயாக வரும் ஊர்மிளா ஆரம்பத்தில் பாசத்திலும் பணம் வந்ததும் குரூரமாகவும் இருமுகம் காட்டுகிறார்.

மகளை மந்திரி பைனான்சியர் காம தீனிக்கு அனுப்பி வைப்பது குரூரம். சோனியா அகர்வாலுக்கு போட்டியாக தங்கையை சினிமாவில் இறக்கி விட துடிக்கும் கோவை சரளா, மனோபாலா கூட்டணியின் காமெடி தியேட்டரை குலுங்க வைக்கிறது. நிக்கோல் குட்டை பாவாடையில் கவர்ச்சி விருந்து படைக்கிறார். டி.வி. நிருபராக வரும் புன்னகை பூ கீதா நடிகை பற்றி துப்பறிந்து அழுத்தம் பதிக்கிறார்.

ராஜ்கபூர், கஞ்சாகருப்பு, சுக்ரன், யோகி தேவராஜ், கேரக்டர்களும் கச்சிதமாய் செதுக்கப்பட்டு உள்ளன. ஜித்தன் ரமேஷ் ஒரு பாடலுக்கு வந்து போகிறார். நடிகைகளின் வலி நிறைந்த இன்னொரு வாழ்க்கையை வலுவான திரைக்கதையில் அழுத்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் ராஜ் கிருஷ்ணா.

நடிகையின் சோகத்தோடு ஜனரஞ்சகமான பிற சினிமா நிகழ்வுகளையும் தொகுத்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். ஆதிஷ் இசையும் நாக.கிருஷ்ணன ஒளிப்பதிவும் பக்க பலம்.