சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸுடன் சேர்ந்து பாடும் ஹரிகரன்!

அக்டோபர் 23, 2012 | தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிச்சுற்றில் பங்கேற்று பாடும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த இன்றைய நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் ஹரிகரன் பங்கேற்றுப் பாடுகிறார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பைனல் நிகழ்ச்சியில் பாட இன்னும் சில தினங்களே இருப்பதால் போட்டியாளர்கள் 5 பேரும் ரசிகர்களை கவர தங்களின் செல்லக்குரலில் இனிமையாய் பாடி ஓட்டுக்கேட்டு வருகின்றனர்.

சுகன்யா, பிரகதி, கௌதம், ஆஜித், யாழினி ஆகிய 5 குழந்தைகள் இறுதிச்சுற்றில் பாட தகுதி பெற்றுள்ளனர். தினம் தினம் அவர்கள் தங்களுக்காக ஒட்டுக் கேட்டு பாடி வருகின்றனர். நடுவர்களாக வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஹரிகரன் பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறார். உயிரே உயிரே என உயிரை உருக்கும் பாடல் தொடங்கி பல பாடல்களை பாடுகின்றனர் சுட்டிக்குழந்தைகள். அவர்களுடன் பாடகர் ஹரிகரனும் தன் இனிய குரலில் பாடி போட்டியாளர்களையும், ரசிகர்களையும் உற்சாகப் படுத்துகிறார்.

நிகழ்ச்சியைப் பார்த்து நன்றாக பாடும் குழந்தையை தமிழகத்தின் செல்லக்குரலாக தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுங்களேன்.